ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழகம் பின்னடைவு: மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த அன்புமணி கோரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜேஇஇ - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிஹார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டை விட பின் தங்கியுள்ளன. ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.

கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத் தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in