Published : 04 Jun 2025 05:26 PM
Last Updated : 04 Jun 2025 05:26 PM

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஞானசேகரன் | கோப்புப்படம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி ஜூன் 2ம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 4) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு மூன்று மாதத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவி ஒருவரை 2024 டிச.23-ம் தேதி இரவு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அதை தனது மொபைலில் வீடியோ எடுத்ததாக கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவரை டிச.24-ம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பான எப்ஐஆர் பொதுவெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் அதுதொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கைதான ஞானசேகரன் சம்பவத்தின்போது யாரோ ஒருவரை சார் என அழைத்ததாக கூறப்பட்டதால் ‘யார் அந்த சார்?’ என்ற ஹேஸ்டேக் மற்றும் போஸ்டரும் அரசியல் ரீதியாக பரபரப்பானது. இதற்கிடையே ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். பின்னர் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் கடந்த 2-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x