Last Updated : 04 Jun, 2025 02:08 PM

1  

Published : 04 Jun 2025 02:08 PM
Last Updated : 04 Jun 2025 02:08 PM

டெல்டாவில் கடைமடைக்கும் காவிரி நீர் செல்ல ஏற்பாடு: 5,028 கிமீ., கால்வாயில் 90% தூர்வாரும் பணிகள் நிறைவு

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில், கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்லும் வகையில், 5,028 கிலோ மீட்டர் கால்வாயில் 90% தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது என்று நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்தார். தொடர்ந்து, அணையின் வலது வரை, இடது கரை, முதல்வர் தண்ணீர் திறக்கும் இடம், விழா மேடை, மேல்மட்ட பூங்கா மற்றும் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து, நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அணையில் நடைபெற்று வரும் 16 கண் மதகு பாலம் புணரமைப்பு மற்றும் சுரங்க கால்வாய் சீரமைப்பு பணிகள், தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சேலம் மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், நிர்வாகப் பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் மற்றும் உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், கவுதம், பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் ரூ 31 கோடியில் புணரமைப்பு, பராமரிப்பு பணிகள் நடந்து வருவதை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன். டெல்டா மாவட்டங்களில் மொத்தம் உள்ள 5,028 கிலோ மீட்டர் கால்வாயில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நடந்துள்ளது. கடைமடை தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு நேற்று காலை 8 மணிக்கு 3,190 கன அடியாகவும், நேற்று மாலை 4 மணிக்கு 5,908 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று காலை 6,234 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 112.80 அடியிலிருந்து 113 அடியாகவும், நீர் இருப்பு 82.45 டிஎம்சியில் இருந்து 82.74 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x