நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி தூத்துக்குடி சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டம்

படங்கள்: என்.ராஜேஷ்.
படங்கள்: என்.ராஜேஷ்.
Updated on
1 min read

கோவில்பட்டி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் ஏ.டி.மரிய கிளாட் அமர்வு, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது, என உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணி முதல் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு வந்த லாரிகள், நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உள்ளதால் சுங்க கட்டணம் செலுத்த மாட்டோம் என கூறினர்.

ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்கப் பெறவில்லை. உத்தரவு நகல் கிடைத்த பின்னர்தான் அதனை பின்பற்ற முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்காத லாரி உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) காலை தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரிகள் அனைத்தையும் சுங்கச்சாவடி கவுன்ட்டர்களில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மற்ற வாகனங்கள் சுங்கச்சாவடியில் அவசர வழியான விஐபி வழியில் செல்கின்றன. காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் 1 மணியை கடந்தும் நீடிக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மதுரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடியில் உள்ள ஒரு வழியில் மட்டும் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in