சிவகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கோயிலில் மகா மண்டபம் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கந்தசாமி பாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் சரிந்து விழுந்த மகா மண்டபம்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கந்தசாமி பாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் சரிந்து விழுந்த மகா மண்டபம்.
Updated on
1 min read

ஈரோடு: சிவகிரி அருகே கந்தசாமி பாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் புதியதாக கட்டப்பட்ட மகா மண்டபம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, கந்தசாமி பாளையத்தில் சடையப்ப சுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயில் உட்பிரகாரத்தில், மகா மண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை கற்களால் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகளை முடித்து, வரும் செப்டம்பர் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த மகா மண்டபத்தின் தூண்கள் நேற்று காலை சரிந்து விழுந்தன.

இதில், மண்டபம் கட்ட பயன்படுத்திய பிரம்மாண்டமான கற்கள் மற்றும் தூண்கள், துண்டு துண்டாக உடைந்தன. இந்த சம்பவத்தின் போது பணியாட்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புதியதாக கட்டப்படும் கோயில் மகா மண்டபம் சரிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி மண்டல பொறியாளர் காணீஸ்வரி ஆகியோர் இடிந்து விழுந்த மண்டபத்தை ஆய்வு செய்தனர். மண்டபம் சரிந்து விழக் காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in