எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
Updated on
2 min read

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அண்ணா பல்கலைக்கழக கொடூரச் சம்பவத்தின் நேரடி குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். அதேநேரம் இவ்வழக்கில் மறைமுகத் தொடர்புடைய அந்த ‘சார்’ யார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை வழக்கு விசாரணையை தொடர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

திக தலைவர் கி.வீரமணி: அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மீதான வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களை பாலுறவு பண்டமாக கருதும் மனிதர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையளிக்கும் தீர்ப்பாகும்.

பாமக தலைவர் அன்புமணி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் பாதிக்கப்பட்ட மாணவிக்கான இழப்பீடாக ரூ.90 ஆயிரம் என்பது போதுமானதல்ல. மாணவிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனை வழிவகுப்பதுடன், பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: அண்ணா பல்கலை. மாணவி மீதான வன் தாக்குதல் தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, ஆதாரங்களையும், சாட்சியங்களையும் உறுதி செய்து, குற்றங்களை நிரூபணம் செய்த காவல்துறையின் நடவடிக்கை சிறப்பானது. அதேபோல் பாதிக்கப்படும் பெண்கள் சட்ட ரீதியாக அதனை எதிர் கொள்ளும் துணிவுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு வழி வகுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் விசாரணை அமைப்புகளும், நீதிமன்றங்களும் உரிய வேகத்தில் செயல்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தினால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில், குறுகிய காலத்துக்குள் வழக்குகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளியை தண்டித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. எதிர்காலங்களில் இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேசகமில்லை.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்த்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை நிச்சயம் என்பதை இவ்வழக்கின் தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது.

இதேபோல் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி தலைவர் வள்ளி ரமேஷ், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in