அதிமுக ஆட்சி அமைந்ததும் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அனைத்து பதில்களும் கிடைக்கும்: இபிஎஸ் உறுதி

அதிமுக ஆட்சி அமைந்ததும் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அனைத்து பதில்களும் கிடைக்கும்: இபிஎஸ் உறுதி
Updated on
1 min read

சென்னை: அதிமுக ஆட்சி அமைந்ததும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அந்த சாரை முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ள சென்னை மகளிர் நீதிமன்றம், தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனைக் காப்பாற்ற முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனையோ சித்து வேலைகளை செய்தது. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை அதிமுக சாத்தியப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் யார் அந்த சார் என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அந்த சார் யார், விசாரணையின் போதே எதற்கு அந்த சார் விலக்கப்பட்டார், எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு, சாரை காப்பாற்றியது யார்,

இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத்தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in