வீரியம் இல்லாத கரோனா வைரஸால் பெரும் பாதிப்பு இருக்காது: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

வீரியம் இல்லாத கரோனா வைரஸால் பெரும் பாதிப்பு இருக்காது: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

‘வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கல்வி அலுவலர் கலைச்செல்வம், தலைமை ஆசிரியர் பத்மஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது; தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் முதல்வரின் வழிகாட்டுதலோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. முதல்வரைப் பொறுத்தவரை, பள்ளி கல்விகளின் தரம் இன்றைக்கு இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வருவதற்கு தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதியிலும் ஆங்காங்கே இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் கல்விக்கான உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

முதல்வர் வழிகாட்டுதலோடு 2025-26-ம் ஆண்டில், ரூ.311 கோடி மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், ரூ.457 கோடி மதிப்பிலான 1.30 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பிலான 9.6 கோடி நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ரூ.211 கோடி மதிப்பிலான பல்வேறு கல்வி உபகரணங்கள் என மொத்தம் ரூ.1,141 கோடி செலவில் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். தும்மல், இருமல் வந்தால் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தொடர்ந்து 5 ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறோம். அதுவேதான் இப்போது நீடிக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in