சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை கருவிகள் பொருத்தம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப்படம்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்குவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தொலைத்தொடர்பு வசதி, ஆதார் பதிவுக்கான நிரந்தர பதிவு மையங்கள், பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநருக்கும், உட்கட்டமைப்பு வழங்குநருக்கும் அனுமதிகளை வழங்க https://row.tn.gov.in என்ற ஒற்றைச் சாளர இணையதளத்தை நிறுவியது.

இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் வரை புதிய தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை நிறுவுவதற்கு 7,772 அனுமதிகளும், தற்போது உள்ள தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கு 33,194 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம் முழுவதும் ஆதார் பதிவு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு 266 நிரந்தர பதிவு மையங்களை நிறுவிய எல்காட் நிறுவனம் அதன்மூலம் 22.09 லட்சம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பொது இடங்களில் இலவச வைஃபை மூலம் இணைய சேவைகளை வழங்கும் திட்டத்தை கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற உமாஜின் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தனியார் பங்களிப்பாளர்களின் ஆதரவுடன் பல்வேறு நகர்ப்புறங்களில் எல்காட் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக இலவச வைஃபை பெறுவதற்கான கருவிகள் சென்னையில் 1,869 இடங்களிலும் (ஆக்சஸ் பாயின்ட்), ஆவடி, தாம்பரம், கோவை ஆகிய மாநகராட்சிகளில் 712 இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in