ஜோலார்பேட்டை: ரயிலில் வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் - ரூ.4.75 லட்சம் வரி செலுத்திய பிறகு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கட்டிகள்
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கட்டிகள்
Updated on
1 min read

ஜோலார்பேட்டை: விற்பனை வரி செலுத்தாமல் ரயிலில் கொண்டுவரப்பட்ட 71 கிலோ வெள்ளியை ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 2) பறிமுதல் செய்தனர். பிறகு, வெள்ளிக்கான வரியை செலுத்திய உடன் மீண்டும் உரியவர்களிடம் வெள்ளிக்கட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் தனது நண்பர் செந்தில் என்பவருடன் இணைந்து சேலத்தில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். நண்பர்கள் இருவரும் தங்களது வெள்ளிப் பட்டறையில் செய்யும் ஆபரணங்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியில் ஆபரண பொருட்கள் செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இருந்து 71 கிலோ வெள்ளி கட்டிகளை ரயில் மூலம் இன்று (ஜூன் 2) கொண்டு வந்தனர்.

இந்த ரயில் இன்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோர் அங்கிருந்து சேலம் மாவட்டத்துக்கு செல்ல மாற்று ரயிலுக்காக ஒன்றாவது நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது, ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படையினர் 1-வது நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் நிகில் குமார் குப்தா மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மாதேஸ்வரன் கொண்டு வந்த கைபையை வாங்கி சோதனை மேற்கொண்டனர்.

அதில் 71 கிலோ வெள்ளிக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெள்ளி ஆபரண நகைகள் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் செல்வதாக மாதேஸ்வரன் கூறியுள்ளார். ஆனால், வெள்ளிக் கட்டிகளுக்கான வரிப்பணம் செலுத்திய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதனால், 71 கிலோ வெள்ளிக் கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உடனடியாக வேலுார் வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல்‌ தெரிவித்தனர்.

இதையடுத்து, வேலூரில் இருந்து வந்த வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 71 கிலோ வெள்ளி இருப்பதும், இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.79 லட்சத்து 15 ஆயிரம் என்பதும் தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட இருவரும் வெள்ளி வாங்கியதற்கான ரசீது மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருப்பதும், வெள்ளிக் கட்டிகளுக்கான விற்பனை வரி அவர்களிடம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, 71 கிலோ வெள்ளிக் கட்டிகளுக்கு விற்பனை வரி‌யாக ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் தொகையை செலுத்த வேண்டும், அதன் பிறகு வெள்ளிக் கட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு, மாதேஸ்வரன் வெள்ளிக் கட்டிகளுக்கான விற்பனை வரி முழுவதும் செலுத்திய பிறகு அவர்களிடம் 71 கிலோ வெள்ளி கட்டிகளை பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 5 மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in