“அடுத்த 10 ஆண்டுக்கு திமுக ஆட்சிக்கு வராது...” - செல்லூர் ராஜூ ‘மதுரை’ சென்டிமென்ட் கருத்து

செல்லூர் ராஜூ | கோப்புப்படம்
செல்லூர் ராஜூ | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: “கடந்த 1977-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த பிறகு 12 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான். அதுபோல், தற்போது நடந்துள்ள மதுரை பொதுக்குழு கூட்டதால் இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது. அதிமுக ஆட்சிதான் அமையும்,” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஜூன் 2) அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது வழக்கம்தான். ஆனால், 3 மணி நேர போக்குவரத்தை தடை செய்வதும், நிரந்தரமாக போக்குரவத்தை நிறுத்துவதும் என முதல்வரின் மதுரை வருகை, மக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே. மக்கள் நினைத்திருந்தால் முதல்வரை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். முதல்வரின் ‘ரோடு ஷோ’ இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும். ரோடு ஷோ-வுக்கு செயற்கையாக மக்கள் அழைத்து வரப்பட்டனர். வரி செலுத்தும் மக்கள், மதுரையில் குண்டும் குழியமான சாலைகளில் செல்கின்றனர். ஆனால், ஒரு நாள் நிகழ்ச்சிக்கு சொகுசு காரில் முதல்வர் வருவதற்காக, புதிதாக சாலைகள் அமைக்கின்றனர். குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.

தெர்மகோல் விஞ்ஞானியே என்று திமுவினர் கேலி கிண்டல் செய்தனர். ஆனால், நீங்கள் ஒரு கழிவுநீர் கால்வாயை திரைச்சீலை கொண்டு அலங்கார தோரணம் கொண்டு மூடியுள்ளீர்கள். இந்த ஐடியாவை உங்களுக்கு யார் கொடுத்தது. அதிமுக எதிர்ப்பால் இந்த திரைச்சீலைகள் அகற்றப்பட்டன. திரைச்சீலைகளை யார் கட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். திமுகவினர்தான் கட்டினர். அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்துவிட முடியுமா?

கடந்த 1977-ல் நடந்த பொதுக்குழு நடந்த பிறகு 12 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தான். அதனால், மதுரை பொதுக்குழு கூட்டத்தால் இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது. அதிமுக ஆட்சிதான் அமையும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in