Last Updated : 02 Jun, 2025 04:18 PM

5  

Published : 02 Jun 2025 04:18 PM
Last Updated : 02 Jun 2025 04:18 PM

டெல்லியில் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு: தமிழக காங். கண்டனம்

கோப்புப்படம்

சென்னை: “தமிழ்நாட்டின் மக்கள் டெல்லியில் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கையும் கண்டனத்துக்குரிய செயலாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதராசி கேம்ப் இடிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி, ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் நூற்றுக்கணக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், நீதிமன்ற உத்தரவை மேற்கோளாகக் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து, வீதிகளில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த மக்கள், தங்களது அடையாளம், உரிமை, இருப்பிடங்களை இழந்து வாழும் நிலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த குடிசைப் பகுதி மக்கள் பெரும்பாலும் தினசரி கூலி, வீட்டு வேலை, தொழிலாளர் பணிகளில் ஈடுபட்டு வரும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல் துறையின் உதவியுடன் வீடுகள் இடிக்கப்படும் போது, அவர்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிறது. பெண்கள் பாதுகாப்பின்றி தண்ணீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

மத்திய அரசு மற்றும் டெல்லி ஆளும் மாநில பாஜக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முழுமையான மறுசீரமைப்புத் திட்டத்தையும் வழங்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இங்கு ஆக்கிரமிப்பு அகற்றம் பற்றிய வரைமுறைகள் மீறப்பட்டுள்ளன. வெறும் நலத்திட்ட அடிப்படையில் வழங்கப்படும் வீடுகள் என்று கூறப்படுவது தவறானது. மக்கள் எந்தவிதமான தீர்வும், முன்னறிவிப்பும் இல்லாமல் இடம்பெயரச் செய்ய வைப்பது மிகப் பெரிய அநீதியாகும்.

வீடுகள் இடிப்பின் போது, 215 குடும்பங்களுக்கு, தற்போது இருக்கும் இடத்திலிருந்து மிகத் தொலைவான பகுதியான நரேலாவில் மாற்று குடியிருப்பு வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 155 குடும்பங்கள் எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்து கொடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து தங்களுடைய பிழைப்புக்காக டெல்லிக்கு சென்றுள்ள தமிழர்களை பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பாகும்.

தங்களது கல்வி, வேலை, வாழ்க்கை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் இழந்துள்ள இவர்கள் மீது கருணை காட்டவேண்டும். இதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக, கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறோம்:

  • இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிரந்தர குடியிருப்பு வழங்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கான தமிழ் மொழி கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தங்களுடைய பழைய வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் அவர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும்.
  • உயிரிழப்பு, உடமைகள் சேதம் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
  • தமிழர்களின் வாழ்வுரிமையை மதிக்காத எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் மக்கள் டெல்லியில் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களது மீதான வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கையும் கண்டனத்துக்குரிய செயலாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x