மாணவி வன்கொடுமை குறித்த எஃப்ஐஆர் கசியவிட்ட வழக்கிலும் நடவடிக்கை தேவை: சிபிஎம்

பெ.சண்முகம் | கோப்புப்படம்
பெ.சண்முகம் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கின் விபரங்களுடன், பாதிக்கப்பட்ட பெண் அடையாளங்களை உள்ளடக்கிய முதல் தகவல் அறிக்கை கசியவிட்ட வழக்கில் தேசிய தகவல் மையம் உள்பட விசாரித்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத விதத்தில் கடும் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி, காவல்துறையில் புகார் அளித்த நிலையில், துரிதமான செயல்பாட்டை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடனடியாக பல்கலை கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் கவனம் ஈர்க்கப்பட்ட இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களோடு முதல் தகவல் அறிக்கை கசிந்தது. அது தொடர்பாகவும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டின் பேரில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட புலன் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 29 சாட்சியங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த வழக்கை விரைவாக விசாரித்த மகளிர் நீதிமன்றம் ஒரு சில மாதங்களிலேயே குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் விசாரணை அமைப்புகளும், நீதிமன்றங்களும் உரிய வேகத்தில் செயல்பட்டு குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தினால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும். அதிலும் கல்வி வளாகத்துக்குள் நடக்கும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த அதிவிரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பெண் முன்னேற்றம், பெண் கல்வி என்ற நோக்கிலும் மிக முக்கியமானதாகும்.

இந்த வழக்கில் குற்றமிழைத்த ஞானசேகரனுக்கு எதிராக 11 பிரிவுகளில் குற்றம் நிரூபணமாகியுள்ள நிலையில், 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பில்லாமல் ஆயுள் தண்டனையுடன் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்திருக்கிறார். குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டிருந்த மொத்தம் 12 குற்றச்சாட்டுக்களில் பதினொன்றில் குற்றம் உறுதியாகியுள்ளது. இதற்காக உறுதியுடன் செயல்பட்ட விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் கல்வி வளாகங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திட வேண்டும். போதுமான சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவலர்களை பயன்படுத்துவதுடன், வளாகத்துக்கு தொடர்பற்ற நபர்கள் உள்ளே புகாத விதத்தில் பாதுகாப்பான சூழலை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்திட அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மேலும், இந்த பாலியல் வன்முறை வழக்கின் விபரங்களுடன், பாதிக்கப்பட்ட பெண் அடையாளங்களை உள்ளடக்கிய முதல் தகவல் அறிக்கை கசியவிட்ட வழக்கில் தேசிய தகவல் மையம் உள்பட விசாரித்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத விதத்தில் கடும் நடவடிக்கையை உறுதி செய்யவேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in