

கள்ளக்குறிச்சி: தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று மூத்த நிர்வாகிகள் பலர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், ராமதாஸ் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். மறுபுறத்தில் அன்புமணி, நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்குவதும், அவர்களை நீக்கும் அதிகாரம் ராமதாஸூக்கு இல்லை எனவும் அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. ராமதாஸ் அழைக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பெரும்பான்மையான நிர்வாகிகள் தவிர்த்து வருவதால், அன்புமணி பக்கம் கட்சியினர் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, மகளிர் அணி நிர்வாகி சிலம்புச்செல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்.
அவர்களோடு ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே கட்சியில் இருந்து விலகிய பாமக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்னுசாமி நேற்று தைலாபுரம் வந்தார். அவரிடம், ராமதாஸ் அழைப்பு விடுத்து வந்தீர்களா என்றபோது, எனது நீண்டகால நண்பர். அவரை சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக கட்சியினர் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட தைலாபு ரத்தில் நேற்று கட்சியினரின் வருகை ராமதாஸூக்கு புதுத் தெம்பை அளித்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.