குடும்ப அரசியல்... கருணாநிதியின் சாதுர்யம் ராமதாஸுக்கு இல்லாமல் போனதா?

குடும்ப அரசியல்... கருணாநிதியின் சாதுர்யம் ராமதாஸுக்கு இல்லாமல் போனதா?
Updated on
2 min read

1989-ல் பாமக என்ற கட்சியை தொடங்கிய போது, “எனது வாரிசுகள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி நடந்​தால் என்னை நடுரோட்டில் நிறுத்தி சவுக்​கால் அடியுங்கள்” என்று சத்தியம் செய்த ராமதாஸ், இன்று சவுக்கடி பட்ட வேதனையில் இருக்கிறார்.

​ரா​மதாஸ் பலமுறை கருணாநி​தியின் வாரிசு அரசியலை வசைபாடி இருக்​கி​றார். இப்போது அதையெல்லாம் நினைவு​கூரும் திமுக-​வினர், “கட்சிக்குள் குடும்ப ஆதிக்​கத்தை அனுதித்த கலைஞர் அதையெல்லாம் எப்படி சமாளித்தார் என்பதை அவரிட​மிருந்து அய்யா ராமதாஸ் படித்​துக்​கொள்ள தவறிவிட்​டாரே” என்று வருத்​தப்​படு​கி​றார்கள்.

திமுக-வில் முதலில் ஸ்டாலினை வைத்துத்தான் வாரிசு அரசியல் பிரச்சினை வெடித்தது. குடும்​பத்​துக்குள் அல்ல... வைகோ போன்ற வெளி ஆட்கள் மூலம் அந்தப் பிரச்​சினைகள் தலை தூக்கியது. வைகோ எழுப்பிய உரிமை நாதம் கட்சிக்கே ஆபத்தை உண்டாக்கும் அளவுக்குப் போனது. அப்போதும் உணர்ச்​சிவசப்படாத கருணாநிதி, அதை சாதுர்யமாக சமாளித்​தார். விளைவு இப்போது, “தமிழர்களை காப்பாற்ற ஸ்டாலினை விட்டால் வேறு நாதியில்லை” என்ற நிலைக்கு வந்திருக்​கிறார் வைகோ.

மகள் கனிமொழிக்கு கட்சிக்குள் ஒரு அங்கீ​காரத்தைக் கொடுக்க நினைத்தார் கருணாநிதி. இதற்கு தொடக்​கத்​திலேயே குடும்​பத்​துக்குள் எதிர் வினைகள் வந்தன. அதனால், கொஞ்சம் ஆறப்போட்டு சமயம் பார்த்து மகளுக்கு தான் செய்ய நினைத்​ததைச் செய்து முடித்​தார். அடுத்ததாக மகன் அழகிரி மதுரையில் இருந்​து​கொண்டு குடைச்சல் கொடுத்​தார். அவர் சென்னைக்கு வருகிறார் என்றாலே கோபாலபுரமே அலறிய காலங்​களும் உண்டு. அந்தளவுக்கு தனக்காகவும் தனது விசுவாசிகளுக்​காகவும் தந்தை​யிடம் மோதினார் அழகிரி.

இதையெல்லாம் பார்த்​து​விட்டு, எதிர்​காலத்தில் மகன் அழகிரியால் குடும்​பத்​துக்குள் அரசியல் சண்டை வந்து​விடக் கூடாது என முடிவெடுத்த கருணாநிதி, அழகிரியை சமயம் பார்த்து டெல்லி பக்கம் திருப்பிவிட்டார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை மத்திய அமைச்​ச​ராகவும் ஆக்கி​னார். மத்திய அமைச்சராக இருந்​தாலும் அவர் மதுரைக்​குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்​காகவே அவரை தென்மண்டல செயலா​ள​ராக்​கி​னார். திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக-வை ஜெயிக்க வைத்ததற்காக அழகிரிக்கு இந்தப் பரிசு என கட்சி​யினரிடம் தனது நடவடிக்கையை நாசூக்காக நியாயப்​படுத்​தவும் செய்தார் கருணாநிதி.

அப்படியும் ஒருகட்​டத்தில் அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக வந்து நின்றார். அப்போது அவர் செய்த ரகளைகளைப் பார்த்​து​விட்டு இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்த கருணாநிதி, அழகிரியையும் அவரது ஆதரவாளர்​களையும் கட்சியை விட்டே நீக்கி​னார். கட்சிக்குள் இத்தனை களேபரங்கள் நடந்தாலும் இன்றைக்கு ராமதாஸை ஒதுக்கித் தள்ளியது போல் யாரும் கருணாநி​திக்கு எதிராக நிற்க​வில்லை.

அதேபோல், வயது முதிர்ந்த நிலையிலும் தலைவர் பதவியை யாருக்கும் விட்டுத்​த​ராமல் தன்னிடமே வைத்திருந்தார் கருணாநிதி. அதனால் தான் கட்சிக்குள் அவர் நினைத்​ததெல்லாம் நடந்தது. கட்சியின் நலன் கருதி ஒட்டுமொத்த குடும்​பமும் தந்த அழுத்​தத்​துக்குப் பிறகு தான் ஸ்டாலினை செயல் தலைவராகவே அங்கீகரித்தார்.

இறுதி மூச்சு வரைக்கும் தலைவர் பதவியை தன்னிடமே வைத்திருந்த கருணாநிதி, தனக்குப் பின்னால் கட்சிக்​குள்ளோ, குடும்​பத்​துக்​குள்ளோ எந்தவித அதிகார யுத்தமும் வந்து​வி​டாதபடி அனைத்​தையும் செய்து முடித்​து​விட்டே நிம்ம​தியானார். அவரது மறைவுக்குப் பிறகு கொஞ்சம் முரண்டு பிடித்த அழகிரியும் இப்போது ஸ்டாலினை அருமைக்​குரிய தம்பியாக பார்க்க ஆரம்பித்​து ​விட்​டார்.

இதையெல்லாம் சுட்டிக்​காட்டும் திமுக-​வினர், “கலைஞரிடம் இருந்த இந்த சாதுர்யம் அய்யா ராமதாஸிடம் இல்லை என்பது இப்போது தைலாபுரத்தில் நடக்கும் சம்பவங்கள் சொல்கின்றன. கலைஞரை போல் அல்லாமல் முன்ன​தாகவே மகனுக்கு கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார் ராமதாஸ். ஆனால், 35 ஆண்டுகள் ராமதாஸுக்கு இருந்த பொறுமை அன்புமணிக்கு இல்லாமல் போய்விட்டது. தான், தனது மனைவி, பிள்ளைகள், தனது சுற்றம் என தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவர், கட்சியை தனது தனிப்பட்ட சொத்தாகவே நினைத்​து​விட்​டார்.

ஆனால், கலைஞர் குடும்​பத்தில் யாரும் அப்படி நினைக்​க​வில்லை. ‘என் உயிரினும் மேலான உடன் பிறப்பே’ என்ற கலைஞரின் கரகர குரலுக்​குத்தான் திமுக தொண்டன் கட்டுப்​பட்டுக் கிடக்​கிறான் என்பதை தலைவரின் குடும்பம் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தது. அதனால், தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத் தயங்கியது அந்தக் குடும்பம். ஆனால், ‘மகனை அரசியலுக்கு கொண்டு வந்து தவறு செய்து​விட்​டேன்’ என 87 வயதில் ராமதாஸை புலம்ப வைத்திருக்​கிறார் மகன் அன்புமணி” என்கிறார்​கள்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in