பூம்புகாரில் ஆக. 10-ல் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ். உடன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ் |
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ். உடன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ் |
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: பூம்புகாரில் ஆக. 10-ம் தேதி வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். அதேநேரத்தில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா என்ற கேளவிக்கு மழுப்பலான பதிலையே கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழாவை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் எனது தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி மாநாட்டுக் குழுவுக்கு தலைவராக செயல்படுவார். மிகச் சிறப்பான முறையில் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்.

பாமகவின் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான சட்ட விதிகளை நான் இதுவரை பார்க்கவில்லை. அனைத்துக் கட்சிகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உண்டு. அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டாம். என்னை யாரும் இயக்கவில்லை. நான் 46 ஆண்டுகாலம் தமிழகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். எனவே, என்னை யாரும் இயக்க முடியாது. அன்புமணி கூட்டத்துக்கும் நிர்வாகிகள் போவார்கள், இங்கும் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

"பாமக உறுப்பினர் அட்டையில் ராமதாஸின் படம் அச்சிட்டு அன்புமணி வழங்கி வருகிறார். உங்கள் படத்தை அச்சிட அனுமதி அளித்தீர்களா? அதில் க்யூஆர் கோடு மூலம் பெறப்படும் நிதி எந்தப் பொருளாளரின் கணக்கிற்கு செல்லும்?" என்ற கேள்விகளை ராமதாஸ் தவிர்த்துவிட்டார்.

அதேபோல, "திலகபாமாவை நீக்கியதுபோல அன்புமணியையும் கட்சியை விட்டு நீக்குவீர்களா?" என்ற கேளவிக்கு, “இதெல்லாம் தேவையற்ற கேள்வி. பாமக பொருளாளர் பதவி சிறுபான்மையிருக்கு வழங்குவது என்பது கட்சியின் கொள்கை. இடையில் சில சலசலப்பு ஏற்பட்டதால், மீண்டும் திருப்பூரைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

பேட்டியின்போது, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in