அரசு பள்​ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு பள்​ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையே பணிஒய்வு உட்பட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டிலும் (2025-26) தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலமாக நிரப்பிக் கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பணிநியமனம் மேற்கொள்வதால் மாணவர்கள் நலன்கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பணிநியமனத்தின்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்தாண்டு நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகால விடுப்பில் உள்ள அல்லது மகப்பேறு விடுமுறையில் சென்ற ஆசிரியர்களுக்கு மாற்றாகவும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் தலைமையாசிரியர்களிடம் தெரிவித்துள்ளோம். இதனால் கற்றல் பணிகள் தொய்வு ஏதும் ஏற்படாது.

இதற்கிடையே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடித்த பிறகே தற்காலிக ஆசிரியர் பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழல் இருக்கிறது. எனவே, தற்காலிக ஆசிரியர்களை முன்கூட்டியே நியமிக்கிறோம். கலந்தாய்வின் போது அனைத்து காலிப் பணியிடங்களும் வெளியே காண்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in