மரபணு திருத்தப்பட்ட விதைகளை டெல்டாவில் அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பி.ஆர்.பாண்டியன்

மரபணு திருத்தப்பட்ட விதைகளை டெல்டாவில் அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பி.ஆர்.பாண்டியன்
Updated on
1 min read

மரபணு திருத்தப்பட்ட விதைகளுக்கு, காவிரி டெல்டா பகுதியில் அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மரபணு மாற்று தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்துக்கு நிரந்தர தடை அமலில் உள்ளது.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியில் இருந்து மரபணு தொழில்நுட்பத்தில் திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் காவிரி டெல்டாவில் இந்த நெல் ரகங்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளவும், பயிரிடவும் தமிழக அரசுடன், மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், உரிய வல்லுநர் குழு அமைத்து, தமிழக அரசு தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

காவிரி டெல்டாவில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, கோடை சாகுபடி செய்த பருத்தி, எள், உளுந்து, பயறு வகைகள் அடியோடு அழிந்துவிட்டன. அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்துவிட்டன. தற்போது தமிழக அரசுதான் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்கிறது. ஆனால், இழப்பீடு பெற்றுத்தர தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும் முன்வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன், இயற்கை வேளாண் வல்லுநர் கோ.சித்தர், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in