கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணை நீர் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்துக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த தேனி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். அருகில் கோட்டாட்சியர் செய்யது முகமது, பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சி.செல்வம் உள்ளிட்டோர்.
கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்துக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த தேனி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். அருகில் கோட்டாட்சியர் செய்யது முகமது, பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சி.செல்வம் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

குமுளி: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் இன்று (ஜூன் 1) தண்ணீரை திறந்து வைத்தார்.

முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இரு போக சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல் போகத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழையின்றி நீர்மட்டமும் குறைந்தது. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டமும் 130.50 அடியாக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடி வனச் சோதனைச் சாவடி அருகே உள்ள சுரங்க வாய்க்கால் மதகில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி ஆட்சியர் ரஞ்ஜத் சிங் தலைமை வகித்து மதகை திறந்து பாசனத்துக்காக நீரை வெளியேற்றினார்.

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சி.செல்வம், வட்டாட்சியர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.

பாசனத்துக்காக விநாடிக்கு 200 கனஅடிநீரும், தேனி மாவட்ட குடிநீர் திட்டங்களுக்காக 100 கனஅடி என்று மொத்தம் 300 கனஅடிநீர் திறக்கப் பட்டது. 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கூறுகையில், இந்த நீர் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412ஏக்கர் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும். என்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி சரியான கால கட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in