திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்புத் தீர்மானம்!

திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்புத் தீர்மானம்!
Updated on
2 min read

மதுரை: மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. மதுரையில் 48 ஆண்டுகளுக்கு முன்பு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு தற்போதுதான் அங்கு திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும், நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும், ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், இந்தித் திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம் உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களின் விவரம்: 1. கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!

2. மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகள்!

3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!

4. உழவர்கள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!

5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!

6. ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!

7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் - இளம் தலைவரின் பணி தொடரத் துணை நிற்போம்!

8. ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!

9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!

10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!

11. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பாஜக அரசுக்குக் கண்டனம்!

12. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம்!

13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!

14. ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

15. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தொடரும் அநீதிகள்!

16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!

17. சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!

18. தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!

19. ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!

20. குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!

21. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!

22. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!

23. மலரட்டும் மாநில சுயாட்சி!

24. பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!

25. எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!

26. அதிமுக ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!

27. வஞ்சக பாஜக.வையும் துரோக அதிமுக.வையும் விரட்டியடித்து 2026-ல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்! ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதிய உறுப்பினர் சேர்க்கை - திமுக சிறப்புத் தீர்மானம்: ‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர்.

இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

திமுக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தினர் அனைவரும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.

புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

விஜயகாந்துக்கு இரங்கல்: இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு புதிய அணிகள் உருவாக்கம்: இதுதவிர திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர் அணியும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணியும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in