வந்தே பாரத் ரயிலில் காலை உணவு பட்டியலில் அசைவம் இல்லை: பயணிகள் குற்றச்சாட்டும் ரயில்வே மறுப்பும்

வந்தே பாரத் ரயிலில் காலை உணவு பட்டியலில் அசைவம் இல்லை: பயணிகள் குற்றச்சாட்டும் ரயில்வே மறுப்பும்

Published on

வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக அசைவ உணவை விருப்பத் தேர்வாக செய்யமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.

சென்னையில் இருந்து கோவை, மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய நகரங்க ளுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகளுக்கு பயணத்தின்போது, உணவு, தேநீர், காபி, பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகிறது. காலை, மதியம் பயணத்தை பொருத்து, பயணிகளின் விருப்பத்தை கேட்டறிந்து உணவு வழங்கப்படுகிறது.

பட்டியலில் நீக்கம்: டிக்கெட் கட்டணத்துடன் உணவு விருப்பத்தை தெரிவிப்போருக்கு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி-யின் இணையதளத்தில் காலை , மதியம், இரவு ஆகிய 3 வேளையும் வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சைவ, அசைவ உணவுபிரியர்களுக்கு ஏற்ப பயணத்தின் போது, குறிப்பிட்ட நிலையத்துக்கு ரயில் வரும் போது உணவு வழங்கப்படும், காலை உணவு பட்டியலில் அசைவ உணவு இருந்தது.

இதற்கிடையில், வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த முறையான அறிவிப்பும் இல்லாமல் காலையில் அசைவ உணவை விருப்ப தேர்வு செய்வது நீக்கப்பட்டதாகவும், மேலும், தெற்கு ரயில்வே அல்லது கேட்டரிங் ஏஜென்சி இது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்பக் கோளாறு: சில வந்தே பாரத் ரயில்களில் காலையில் அசைவ உணவை விருப்பமாக தேர்வு செய்ய முடியவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. மாறாக, காலையில் வந்தே பாரத் ரயில்களில் பயணித்த பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மே 30-ம் தேதி தெற்கு மண்டலத்தில் இயக்கப்பட்ட 7 வந்தே பாரத் ரயில்களில் 603 அசைவ உணவுகளும்,மே 31-ம் தேதி தெற்கு மண்டலத்தில் இயக்கப்பட்ட 6 வந்தே பாரத் ரயில்களில் 1,302 அசைவ உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சி நடைபெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in