எம்.பி சீட் குறித்து துரை வைகோ வருத்தம் ஏன்? - மதிமுக பொருளாளர் விளக்கம்

துரை வைகோ, மு.செந்திலதிபன் | கோப்புப் படம்
துரை வைகோ, மு.செந்திலதிபன் | கோப்புப் படம்
Updated on
1 min read

வைகோவின் எம்.பி. சீட் குறித்த துரை வைகோ வருத்தம் தெரிவித்தது ஏன்? என்பது குறித்து மதிமுக பொருளாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக திமுக உறுதியளித்தது என்றும் தற்போது வழங்கப்படாததால் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துரை வைகோவின் வருத்தம் குறித்து மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலின்போது தொகுதி பங்கீடு குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு தலைவராக இருந்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, "மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை பதவி காலம் இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. தற்போது மக்களவையில் ஒரு எம்.பி. மாநிலங்களவையில் ஒரு எம்.பி., என இரண்டு எம்.பி.-க்கள் இருக்கப் போகிறார்கள். வைகோவின் பதவி காலம் முடிந்த பிறகு திமுக தலைவர் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார்" என்று கூறினார்.

எனவே 2019-ம் ஆண்டைப் போலவே ஒரு மக்களவை உறுப்பினரும், பொதுச்செயலாளர் வைகோவின் எம்.பி. பதவி காலம் முடிந்ததும் மீண்டும் மாநிலங்களவை சீட் மதிமுகவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருந்தது. கடந்த தேர்தலின்போது திமுக பேச்சுவார்த்தைக் குழு எங்களிடம் கூறியதை திமுக தலைமையின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். ஆனால் மதிமுகவுக்கு சீட்டு ஒதுக்கப்படவில்லை. எனவேதான் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ‘வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. இதனைக் கடந்த செல்வோம்’ என்று கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in