மனோன்மணி​யம் சுந்தரனார் பல்கலை.யில் வினாத்தாள் கசிவு: போலீஸார் விசாரணை - என்ன நடந்தது?

மனோன்மணி​யம் சுந்தரனார் பல்கலை.யில் வினாத்தாள் கசிவு: போலீஸார் விசாரணை - என்ன நடந்தது?
Updated on
1 min read

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 6 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்பில் தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ரியல் லா ) என்ற பாடத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இதனிடையே, பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். அதில், "கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த தொழிற்சாலை சட்டம் பாடத்துக்கான வினாத்தாளை 26-ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் அடையாளம் தெரியாதவர் அனுப்பியுள்ளார். இதனால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் பேட்டை போலீஸார் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகள் 316 (நம்பிக்கை மோசடி செய்தல்), 318 (ஏமாற்றுதல்), 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3, 4 மற்றும் 5 (தேர்வு முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in