தமிழகத்தில் கோடை காலத்தில் 97% அதிக மழை: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல்

தமிழகத்தில் கோடை காலத்தில் 97% அதிக மழை: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வழக்கத்தைவிட 97 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் அடங்கிய கோடைகாலத்தில் 25 செ.மீ. மழை கிடைத்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 13 செ.மீ. மழை கிடைக்கும். இம்முறை வழக்கத்தைவிட 97 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. இந்த 3 மாதங்களில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்துள்ளது.

சென்னையில் இந்த 3 மாதங்களில் வழக்கமாக 5 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இம்முறை 12 செ.மீ., அதாவது வழக்கத்தைவிட 129 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நாள் முதல் மே 31-ம் தேதி வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 141 செ.மீ., சின்கோனாவில் 101 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த கோடைகாலத்தில் அதிகபட்சமாக வேலூரில் 16 நாட்கள், கரூர் பரமத்தியில் 10 நாட்கள், 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் மே 15-ம் தேதி 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அங்கு மே 4 மற்றும் 7-ம் தேதிகளிலும், மதுரை விமான நிலையத்தில் மே 13, 14-ம் தேதிகளிலும் 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை மே மாதத்திலேயே தொடங்கினாலும், இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூன் 1 முதல் செப்.30-ம் தேதி வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாக கணக்கிடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமாக மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 87 செ.மீ. மழை கிடைக்கும். இந்த ஆண்டு மழைப்பொழிவு 106 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 110 சதவீதம் மழை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வழக்கமாக 33 செ.மீ. மழை கிடைக்கும். வரும் ஜூன் மாதத்தில், வட தமிழகத்தின் உள் பகுதிகளில் வழக்கத்தை விட குறைவாகவும், மற்ற மாவட்டங்களில் வழக்கமான அளவும் மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in