கழிவு பொருட்களை சேகரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து அங்கீகரிக்க முடிவு: தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு

கழிவு பொருட்களை சேகரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து அங்கீகரிக்க முடிவு: தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் அனைத்து கழிவுப் பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களைத் தேர்வு செய்து, பட்டியலிட்டு அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய ‘தூய்மை இயக்கம்’ என்ற ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுகிறது. இநத அமைப்பை செயல்படுத்த தூய்மை தமிழகம் நிறுவனம் (சிடிசிஎல்) என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

தூய்மை இயக்கத்தின் கீழ் செயல்படும் தூய்மை தமிழகம் நிறுவனம், தமிழகம் முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான கழிவு மேலாண்மையை கட்டமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தூய்மை தமிழகம் நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல்பூர்வமாக மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும் அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அனைத்து கழிவுப் பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்களையும் மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களையும் தேர்வு செய்து, அவற்றின் பட்டியல் தூய்மை தமிழகம் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளது.

எனவே, தொடர்புடைய தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியுடைய நிறுவனங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கீரிக்கப்பட்ட நிறுவனங்கள் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாகவும் முறைசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்தும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும் அப்புறப்படுத்துவதையும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in