கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் - விஏஓ, கனிமவள ஆர்ஐ பணியிடை நீக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலர், கனிமவள வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் 400 அடி ஆழ பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக குவாரி உரிமையாளரின் தம்பி, குவாரி பொறுப்பாளர், மேற்பார்வையாளர் ஆகிய 3 பேரை எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும், குவாரி உரிமையாளர் மேகவர்மனை போலீஸார் தேடி வருகின்றனர்.

கனிமள அதிகாரிகள் விசாரணையில், விபத்து நடைபெற்ற கல்குவாரி உரிமம் 8 மாதங்களுக்கு முன்பே காலாவதியானதும்,வேறு இடத்துக்கு பெற்ற உரிமத்தை பயன்படுத்தி விதிமீறி இயங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, வேறு இடத்துக்கு வாங்கிய கல்குவாரி உரிமத்தை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக ரத்து செய்தார்.

இதனிடையே மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், குவாரி இயங்கிய காலக் கட்டத்தில் கனிமவள வருவாய் ஆய்வாளராக இருந்த வினோத் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். வினோத் தற்போது பதவி உயர்வு பெற்று மானாமதுரை மண்டல துணை வட்டாட்சியராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம்புணரி வட்டாட்சியர் பரிமளா, திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த நாகநாதன், சிங்கம்புணரி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். குவாரி விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு வட்டாட்சியர் பரிமளாவுக்கு 17(பி) குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in