‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார்.

நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் “வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த ஜி.யூ.போப் “மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் அனைத்துலக மனிதனைப் பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து - கெடுக உலகியற்றியான்.” என கற்பனை கருத்தியலை சாடி, உழைப்பின் மேன்மை குறித்து திரும்ப, திருப்ப எடுத்துக் கூறி, மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in