தேசவிரோத குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு

தேசவிரோத குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வரும் அஸ்லம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அஸ்லாம் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “நிறுவனத்தின் உதவி பதிவாளராக உள்ள அவினவ் தாக்கூர் மீது பாலியல் புகார் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போரட்டத்தில் ஈடுபட்டேன்.

இதனால், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி நான் நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் எனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீக்கப்பட்டுள்ளேன், என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டீ.வி. தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, மாணவர் அஸ்லாமை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள நீதிபதி, இந்த மனுவுக்கு ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in