‘தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு; பதற்றம் தேவையில்லை’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (மே.31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனால், இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் இது குறித்து பதற்றம் அடையத் தேவையில்லை. புனே ஆய்வு மையத்துக்கு, தமிழகத்திலிருந்து 17 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

மத்திய சுகாதார அமைச்சகம், முகக் கவசம் அணிவது நல்லது என்று தெரிவித்துள்ளது. அதையேத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். முகக்கவசம் அணிவது நல்லதே தவிர, எதுவுமே கட்டாயம் கிடையாது. அதுவும், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும் எல்லா வசதிகளும் சரியாக உள்ளது.

இந்தச் சூழலில் கரோனா பரவல் பற்றிய வதந்திதகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்திதான் பெரிய நோய். சென்னை அரசு மருத்துவமனையில் முதியவர் ஒரு இறந்ததற்கு கரோனா காரணம் அல்ல. அவருக்கு கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் இருந்தது. ஏற்கெனவே இருந்த அந்த இணை நோய் பாதிப்பாலேயே அவர் உயிரிழந்தார்.

கரோனா தொற்றைப் பொருத்தவரையில், மத்திய அரசு வழிகாட்டுதல்களை எப்போதும் நாம் பின்பற்றுகிறோம். அவர்கள் ஒருவேளை விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தச் சொன்னால், உடனடியாக அங்கே கண்காணிப்புக் குழு அமைப்போம். இப்போதைக்கு பதற்றப்படத் தேவையில்லை.

அதேபோல், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. பருவமழைக் காலம் என்பதால் காய்ச்சல் முகாம்களும் நடத்துகிறோம்.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in