தெரு நாய்கள் கட்டுப்பாடு தொடர்பான டெண்டருக்கு தடை கோரி வழக்கு

தெரு நாய்கள் கட்டுப்பாடு தொடர்பான டெண்டருக்கு தடை கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்களும் பரவலாக நடக்கின்றன.

இதை கருத்தில் கொண்டு, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சென்னையில் வளர்ப்பு நாய்களில் இருந்து வேறுபடுத்தி அறியும் வகையில், தெரு நாய்களுக்கு சிப் பொருத்தும் பணிகளுக்கு ரூ.5.20 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.

இந்நிலையில், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தும் வகையில் கோரப்பட்ட டெண்டர் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கு தடை கோரி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘ஏற்கெனவே தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் இனப்பெருக்கத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், தமிழக அரசு சட்ட விரோதமாக மீண்டும் டெண்டர் கோரியுள்ளது. எனவே, அந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில விலங்குகள் நல வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட கால்நடை துறை அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in