சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழை!

இடம்: சென்னை - ராயப்பேட்டை | படம்: எஸ்.ரவீந்திரன்
இடம்: சென்னை - ராயப்பேட்டை | படம்: எஸ்.ரவீந்திரன்
Updated on
1 min read

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சி நிலவி வருகிறது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மே மாதத்திலேயே தொடங்கியது. கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் தீவிரமாக உள்ளது. பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் 2 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் சுமார் 5.30 மணியளவில் மீண்டும் மழை பெய்தது.

இவ்வாறு சென்னை, புறநகரில் விட்டு விட்டு மழை பெய்ததால், மாலை, இரவு நேரங்களில் குளிர்ச்சியாக, ரம்மியமான சூழல் நிலவியது. மாலை 6 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மடிப்பாக்கம், பாரிமுனை, நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ, கொளத்தூர், அயப்பாக்கம், வளசரவாக்கம், அடையார், வேளச்சேரி, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், மேடவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, வடபழனி, சென்னை சென்ட்ரல் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை, புறநகரில் மழை பெய்து வருவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறும்போது, “தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மேற்கு வங்கம் அருகே, பருவமழைக்கால காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அரபிக் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்றை ஈர்ப்பதால், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மாலை நேரங்களில் மழை வருவது இயல்பான ஒன்று தான்” என்றார்.

இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (மே 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in