நகைக் கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ. 2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.

அந்த வகையில், நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும், அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிதாக 9 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த வரைவை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இதுபோன்ற புதிய விதிமுறைகளை கள அளவில் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும். அதனால் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகளை செயல்படுத்தலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in