அனைத்து நகைக் கடன்களுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

அனைத்து நகைக் கடன்களுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: “அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்துக்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.

இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி, பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in