Published : 30 May 2025 02:31 PM
Last Updated : 30 May 2025 02:31 PM
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தினமும் பலத்த மழையும், மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி: கடந்த 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 68 மி.மீ., அடவிநயினார் அணையில் 56 மி.மீ., கருப்பாநதி அணையில் 55.50 மி.மீ., தென்காசியில் 47 மி.மீ., ராம நதி அணையில் 40 மி.மீ., கடனாநதி அணையில் 39 மி.மீ., ஆய்க்குடியில் 22 மி.மீ., சங்கரன்கோவிலில் 4.80 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
36.10 அடி உயரம் உள்ள சிறிய அணையான குண்டாறு அணை இன்று முழு கொள்ளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 35 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. 85 அடி உயரம் உள்ள கடனா நதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 62.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 311 கனஅடி நீர் வந்தது. 46 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராம நதி அணை நீர்மட்டம் மூன்றரை அடி உயர்ந்து 69 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 134 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
72 அடி உயரம் உள்ள கருப்பா நதி அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 59.06 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 323 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 14.50 அடி உயர்ந்து 93 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 308 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
குற்றாலம் அருவிகளில் கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இன்று 6-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை நீடித்தது. கோடை விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் அருவிகளில் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, “குற்றாலம் அருவிகளிள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பான முறையில் குளித்துச் செல்லலாம். ஆனால் இந்த முறை அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
நீண்ட தூரத்தில் இருந்து ஆவலுடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஐந்தருவியில் இருந்து வரும் நீர் படகு குழாமில் கால்வாய் வழியாக வரும். ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையிலும் படகு குழாமுக்கு தண்ணீரை திறந்து விடாததால் குறைவான அளவிலேயே தண்ணீர் உள்ளது. இதனால் படகு சவாரியும் தொடங்கப்படாமல் உள்ளது.
விடுமுறை காலத்தில் அருவிகளிலும் குளிக்க முடியாமல், படகு சவாரியும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. புலியருவி, சிற்றருவியில் குளிக்கவும், படகு குழாமில் படகு சவாரியை தொடங்க நீர்வரத்தை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT