ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
Updated on
1 min read

சென்னை: நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டு்ப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்துக்கான பூர்வாங்கப் பணிகளை நேற்று காலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் 4 தளங்களுடன் 19,464 சதுர அடி பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துறை செயலர் சத்யபிரத சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கும் கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் கடன், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதையும் கடந்து கால்நடைக்கடன் வழங்குவதற்காக, “விவசாயிகளுக்கு பலம் கால்நடைகள்” அவற்றை பராமரிப்பதற்கு, புதிதாக வாங்குவதற்கு என கடன்கள் வழங்கப்பட்ட உள்ளது அதனை அவர்கள் உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் வட்டியில்லாக் கடனாக வழங்க உள்ளது.

இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடிக்கு பயிர் கடன் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது நகைக்கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் பாதிக்கும், ஆனால் இது கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது. விலைமதிப்பில் 75 சதவீதம் கொடுக்கலாம் என்று சொல்கின்றனர். அதை தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இது ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்களை இது வெகுவாக பாதிக்கும். இதனால் தான் முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in