பழைய புத்தகக் கடை போல செயல்படும் அரசு நூலகங்கள்: தமிழக பாஜக விமர்சனம்

பழைய புத்தகக் கடை போல செயல்படும் அரசு நூலகங்கள்: தமிழக பாஜக விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: பழைய புத்தகக் கடை போல அரசு நூலகங்கள் செயல்படுவதாக தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க ஆட்சி என்றாலே ஏதோ கல்விக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற மாயை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாயை இப்போது நூலகத் துறைக்குள் நடக்கும் நாடகங்களால் உடைபட்டு வருகிறது.

தி.மு.க ஆட்சி அமைந்த 2021 -22, 2022 - 23 ஆண்டுகளில் வெளிவந்த புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரி பிரதிகள் கூட இதுவரை பெறப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரிகள் பெற வேண்டும். ஆனால் இப்போது வரை நூலகத்துறை எதையும் வாங்கியதாக தகவல் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் பெரும்பாலான நூலகங்கள் பழைய புத்தகக் கடைகளை போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன' என்பதுதான் திமுகவின் நான்காண்டு கால நல்லாட்சிக்கு அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்புலத்தில் வெளியாகும் ’புதிய புத்தகம் பேசுது’ தலையங்கம் அளித்திருக்கும் பாராட்டு சான்று.

குறிப்பாக முதல்வருக்கு தனது தந்தை கருணாநிதி பெயரில் பிரம்மாண்ட நூலகக் கட்டிடங்கள் கட்டுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர, கிராமப்புற் மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண நூலகங்கள் மீது இல்லை. கூட்டணிக் கட்சிகளின் அதிகாரபூர்வ இதழ் போன்ற அரசியல் திணிப்புகள்தான் நூலகங்களில் செய்யப்படுகிறதே தவிர, கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான நூல்கள் அல்ல. மேலும், நூலகங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. நூலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் பணியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.

தமிழகத்தின் நான்கைந்து இடங்களில் கோடிகளைக் கொட்டி பிரம்மாண்டக் கட்டிடங்களை காட்சிப்படுத்திவிட்டு, ஆயிரக்கணக்கான நூலகங்களை அம்போவென கைவிட்டிருக்கிறது திமுக ஆட்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in