ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழக அரசின் 7-வது நிதி ஆணையம் அமைப்பு

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழக அரசின் 7-வது நிதி ஆணையம் அமைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெறற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழக அரசு அமைத்துள்ள இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், அலுவல் வழி உறுப்பினர்களாக நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், பேரூராட்சிகள் ஆணையர், உறுப்பினர் செயலராக நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தாயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையம், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்து, பரிந்துரை செய்யும்.

குறிப்பாக, மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், அத்தகைய வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றுக்குரிய பங்குகளை முறையாக பிரித்தளிக்கும்.

2026 ஆக.31-ல் அறிக்கை: ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக் கூடிய அல்லது அவையே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானிக்கும்.

மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள்; 2027-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in