தொகுதியும் இல்லை... எம்.பி.யும் இல்லை! - புதுக்கோட்டை மக்கள் அதிருப்தி

தொகுதியும் இல்லை... எம்.பி.யும் இல்லை! - புதுக்கோட்டை மக்கள் அதிருப்தி
Updated on
1 min read

மாநிலங்களை எம்.பியாக உள்ள புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே புதுக்கோட்டை எம்.பி தொகுதி பறிபோய் உள்ள நிலையில், தற்போது எம்.பியும் இல்லாததால் அந்த மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

2004 வரை இருந்த புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி, தொகுதி மறுவரையறையின் மூலம் நீக்கப்பட்டது. அதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கையுடனும், விராலிமலை தொகுதி கரூர் தொகுதியுடனும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரத்துடனும் இணைக்கப் பட்டன.

மாவட்டத்தில் 16.18 லட்சம் மக்கள் தொகை, 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தும் புதுக்கோட்டைக்கென தனி எம்.பி. இல்லாமல் இருந்ததால், மத்திய அரசின் திட்டங்களை புதுக்கோட்டைக்கு கொண்டு வருவதில் பின்னடைவு ஏற்பட்டது. 2019ல் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருந்தாலும், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், மாவட்ட மக்கள் தங்கள் ஊர் எம்.பியாகவே கருதினர்.

அதன்பிறகு, புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவரும், புதுக்கோட்டையில் எம்.பி. அலுவலகத்தை அமைத்து மக்கள் பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் திருநாவுக் கரசருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிய உள்ள நிலையில், திமுக சார்பில் புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை. ஏற்கெனவே புதுக்கோட்டை எம்.பி தொகுதி பறிபோய் உள்ள நிலையில், தற்போது எம்.பியும் இல்லாததால் அந்த மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கரன் கூறியது: புதுக்கோட்டையில் இருந்து மக்களவை உறுப்பினராகும் வாய்ப்பு இல்லாமல் போன நிலையில், மாநிலங்களவைக்கும் திமுகவில் இருந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த வெற்றிடத்தை அதிமுகவாவது நிரப்ப முன்வர வேண்டும்” என்றார்.

இதனிடையே, எம்.எம்.அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில், "மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி" என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in