சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்த திமுக கவுன்சிலர் சுகாசினி - அதிமுகவினர் போராட்டம்

படங்கள்: லட்சுமி நாராயணன்
படங்கள்: லட்சுமி நாராயணன்
Updated on
1 min read

சேலம்: சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்து திமுக கவுன்சிலர் சுகாசினி தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து அதிமுகவினர் மாரகராட்சி அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் இன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி எழுந்து, கட்டிட அனுமதி முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டி பேசினார் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவர் மீது பேப்பர் ஒன்றை தூக்கி எறிந்தனர். மேலும், திமுக கவுன்சிலர் சுகாசினி எழுந்து அவர் அருகில் சென்று பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் சுகாசினி, எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தியின் கன்னத்தில் மாறி, மாறி அறிந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற உறுப்பினர்கள் எழுந்து இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பும், கைகலப்பும் ஏற்பட்டது . இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் திடீரென மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திமுக கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.

மாநகராட்சி டெண்டர்களை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே எடுப்பதாக கவுன்சிலர் யாதவ மூர்த்தி குற்றம்சாட்டிய நிலையில், திமுக கவுன்சிலர்கள் அவரைச் சுற்றி வளைத்து கேள்வி எழுப்பியபோது இந்த மோதல் ஏற்பட்டது.

திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தியை, திமுக பெண் கவுன்சிலர் சுகாசினி தாக்கிய தகவல் அறிந்து அதிமுகவினர் மாநகராட்சி கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தி, அதிமுக பெண் கவுன்சிலர் சசிகலா மயக்கமடைந்து விழுந்தனர். இருவரையும் அதிமுக தொண்டர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித் துள்ளனர்.

தொடர்ந்து அதிமுகவினர் மாநகராட்சி கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி தலைவரின் கன்னத்தில் அறைந்து திமுக பெண் கவுன்சிலர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in