

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் உரிமமின்றி கனிமங்களை ஏற்றிச் சென்ற 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளத்துறை சார்பில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமை வகித்துப் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தடுக்க உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஏப்ரலில் 31 வாகனங்களும், இம்மாதம் (மே) இதுவரை 46 வாகனங்கள் என மொத்தம் 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உரிமமின்றி கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், கிருஷ்ணகிரி வட்டம் சென்னசந்திரம், சூளகிரி வட்டம் தேன்துர்கம் ஆகிய 2 இடங்களில் உரிய அனுமதியின்றி சாதாரண கற்கள் வெட்டியெடுத்து வெளியேற்றியது கண்டறியப்பட்டு, உரிய அபராதமும்,
குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள், குத்தகை காலம் நிறைவடைந்த பின்னர் தொடர்ந்து இயங்கும் குவாரிகள், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள், சேமிப்பு கிடங்கு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் இயங்கும் கிரஷர்கள் கண்டறியப்பட்டு உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பபட்டுள்ளது.
குறிப்பாக, குவாரி பகுதியில் அனுமதித்த அளவைவிட அதிக ஆழம் வெட்டி எடுப்பதைக் கண்டறியவும், குவாரிக்குப் பயன்படுத்தும் வெடி பொருட்களை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருநடை சீட்டைப் பயன்படுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாகனங்களின் மூலம் கனிமம் எடுத்துச் செல்வதைத் தடுக்கும்பொருட்டு, வாகன தணிக்கை மேற்கொள்ளவும், 50 சதவீதம் பசுமை வரி செலுத்தாமல் அண்டைய மாநிலங்களுக்குக் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், துணை ஆட்சியர் பிரியங்கா, கோட்டாட்சியர் ஷாஜகான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனஞ்செயன், கனிம வளத்துறை உதவி இயக்குநர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.