11 பிரிவுகளில் ஞானசேகரன் குற்றவாளி: அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பு சொல்வது என்ன?

போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும் ஞானசேகரன். (மாஸ்க் அணிந்திருப்பவர்)
போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும் ஞானசேகரன். (மாஸ்க் அணிந்திருப்பவர்)
Updated on
2 min read

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என அறிவித்துள்ள சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, தண்டனை விவரம் வரும் ஜூன் 2-ம் தேதியன்று பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவி ஒருவரை 2024 டிச.23-ம் தேதி இரவு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அதை தனது மொபைலில் வீடியோ எடுத்ததாக கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவரை டிச.24-ம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பான எப்ஐஆர் பொதுவெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் அதுதொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கைதான ஞானசேகரன் சம்பவத்தின்போது யாரோ ஒருவரை சார் என அழைத்ததாக கூறப்பட்டதால் ‘யார் அந்த சார்?’ என்ற ஹேஸ்டேக் மற்றும் போஸ்டரும் அரசியல் ரீதியாக பரபரப்பானது.

இதற்கிடையே ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுகவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் எனக்கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞரான வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் புலன் விசாரணை மேற்கொள்ள ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்.24-ம் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தி்ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் ஞானசேகரன் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறி அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மார்ச் 7-ம் தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏப்.23-ம் தேதி முதல் சாட்சி விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தியும், கைதான ஞானசேகரன் தரப்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

தினந்தோறும் நடந்து வந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட 29 பேர் சாட்சியம் அளித்தனர். குற்றத்தை நிரூபிக்க 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே 20-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மே 28-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நீதிபதி, 'உங்கள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) 126(2) (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்திசென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) - (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) (விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(B) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ)-ன் கீழ் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமி்ன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் உங்களை குற்றவாளி என தீர்மானித்து தீர்ப்பளிக்கிறேன்' என்றார்.

அப்போது ஞானசேகரன், ‘எனக்கு அப்பா இல்லை. வயதான அம்மா இருக்கிறார். அவரும் நோய்வாய்ப்பட்டுள்ளார். திருமணமாகி மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த வழக்கில் கைதான பிறகு எனது குடும்பமும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தை காப்பாற்ற வேறு யாரும் இல்லை என்பதால் குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்' என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, 'இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகவே பார்க்க வேண்டும். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவியிடம் காட்டுமிராண்டித்தனமாக அத்துமீறி நடந்துள்ளார். இவர் மீது ஏற்கெனவே 35 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேறு எந்த பெண்ணும் இதுபோல மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவருக்கு அதிகபட்சமாக, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்' என்றார்.

ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கு மிக குறுகிய காலகட்டத்தில் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்' எனக் கோரினர்.

அதையடுத்து நீதிபதி, 'இந்த வழக்கில் வரும் ஜூன் 2-ம் தேதி தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும். அதுவரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் வைத்திருக்க வேண்டும்' என போலீஸாருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு பதியப்பட்டு 5 மாதங்களே ஆனாலும், மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, 3 மாதங்களில் விசாரித்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in