

திருச்சி: கவிஞர் சல்மா மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, திமுகவை சேர்ந்த எம்.முகமது அப்துல்லா, வழக்கறிஞர் வில்சன், தொமுசவை சேர்ந்த எம்.சண்முகம், என்.சந்திரசேகரன் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி்.க்களின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதையடுத்து, இந்த பதவிகளுக்கு திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரொஹையா மாலிக் (எ) கவிஞர் சல்மா, சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சிக்கு மேலும் ஒரு எம்.பி: திருச்சியில் ஏற்கெனவே திமுகவுக்கு மாநிலங்களவை எம்.பி.,யாக திருச்சி சிவா உள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பியாகவும், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, பெரம்பலூர் தொகுதி எம்.பியாகவும் உள்ளனர். இதில் அருண் நேரு, பெரம்பலூர் எம்.பி.,யாக இருந்தாலும், அந்தத் தொகுதியில் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளதால், இவரது செயல்பாடு பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தை சுற்றியே இருக்கிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா, திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதனால் திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஓங்கி ஒலிக்கும் என்பதால் திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாநகர ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிருப்தியில் மதிமுகவினர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயரெடுத்த அவருக்கு திமுக கூட்டணி சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியினர் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால், அந்தக் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். ‘வாழும் வரை அவருக்கு வழிவிட்டிருக்கலாம்’ என பலர் கருத்து தெரித்துள்ளனர். மேலும் பலர் கூட்டணி தர்மம் என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறியபடி விமர்சனங்களை மன வருத்தத்துடன் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.