

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அளிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் அவர்களுக்கான விரைவான நீதியைப் பெற்று தருவதிலும் திமுக அரசு காட்டும் உறுதிப்பாட்டுக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தத் தீர்ப்புச் சாட்சியாகியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக் கொள்ளாது என்பது மக்கள் மன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அண்ணா பல்கலைக்கழக வழக்கில் திமுக நிர்வாகி ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய நீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன். அரசியல்ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிவரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி, இன்று அதில் வெற்றி கண்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள். அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் எனது வாழ்த்துகள். ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: துரிதமாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும் காவல் துறையினருக்கும் பாராட்டுக்கள். குற்றவாளி எந்த வகையிலும் தப்பிக்க வழியில்லாமல் வழக்கு விசாரணை நடைபெற்றது பாராட்டத்தக்கதாகும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது என்பது உறுதியாகியிருக்கிறது. குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்க முடியும்.
பாமக தலைவர் அன்புமணி: பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளும் களமிறங்கிய பிறகுதான் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டது. இல்லாவிட்டால் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு ஞானசேகரன் அப்பாவியாகவும், புனிதராகவும் காட்டப்பட்டிருப்பார். ஞானசேகரனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக ஞானசேகரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்தத் தீர்ப்பு நீதித் துறையின் மீதான நம்பிக்கையை பெண்களிடையே அதிகரித்துள்ளதோடு, இதன்மூலம் எதிர்காலத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் வெகுவாக குறையும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.