அண்ணா பல்கலை. வழக்கில் திமுக அரசு மீதான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை: இபிஎஸ்

அண்ணா பல்கலை. வழக்கில் திமுக அரசு மீதான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை: இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அரசு மீது நிலவும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, திமுக அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன், விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது, ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?

சிறப்பு புலனாய்வுக்குழுவில் பணியாற்றிய டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன், உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம், இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார் என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது.

வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க வேண்டும்?

யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. காலம் மாறும். காட்சிகள் மாறும். விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த சார் "யாராக இருந்தாலும்" கூண்டிலேற்றப்படுவார். சாரை காக்கும் சார்களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.

உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே. உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா. அப்படியென்றால், உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் நீங்கள் தலையிட்டீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா, சாரை காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும் முற்றிலும் எதிரான ஆட்சி. இந்த ஆட்சி வீழும். இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in