ஊட்டி - கூடலூர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம்: இரவு போக்குவரத்துக்கு தடை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

உதகை: ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், இச்சாலையில் இரவு நேரப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்கா உட்பட ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன. ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் - கூடலூர் இடையே தவளைமலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ராட்சத பாறைகள் மரங்களின் இடுக்கில் சிக்கியுள்ளன.

அவை எந்நேரமும் கீழே விழுந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சாலையில் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர காலத்தில் மட்டுமே உள்ளூர் வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை அனுமதிக்கப்படும்.

அரசுப் பேருந்துகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்லலாம். சுற்றுலா வாகனங்களையும் பாதுகாப்பாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. அப்பகுதியில், காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் முகாமிட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in