

மதுரை: “அமலாக்கத் துறை சோதனைக்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்?” என துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: “பாஜக - அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்திருப்பது உண்மை. பிரதமர் மோடிக்கும் பயப்படமாட்டேன், ஈ.டி-க்கும் பயப்படமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி தெடார்ந்து பேசி வருகிறார். திமுகவினரும் அப்படியே பேசி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2011-ல் மார்ச் மாதம் அமலாக்கத் துறை சோதனையை வைத்து மிரட்டி தான் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அப்போது உதயநிதி அரசியலுக்கு வரவில்லை. அப்போது இருந்தே உதயநிதிக்கு அமலாக்கத் துறை மேல் பயம் உள்ளது.
அமலாக்கத் துறைக்கு இப்போது வரை பயம் இல்லை என்றால் உதயநிதியின் நண்பர்கள் ஏன் லண்டனுக்கு தப்பி செல்ல வேண்டும்? நண்பர்களை உதயநிதி ஏன் லண்டனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்? இங்கேயே இருக்க வேண்டியதுதானே. உதயநிதி அவரது நண்பர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டியதுதானே. அமலாக்கத் துறைக்கு பயம் இல்லை என்றால் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?
தமிழக பாஜக தலைவராக முருகன் இருந்த போது ‘வேல் யாத்திரை’ நடத்தினார், அண்ணாமலை தலைவராக இருந்தபோது ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடத்தினார். என்னுடைய யாத்திரை தமிழக சட்டப்பேரவைக்கு திரளாக பாஜக எம்எல்ஏக்களை அழைத்துச் செல்வதாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட்ட பலர் 2-வது இடத்துக்கு வந்தோம். சட்டப்பேரவைத் தேர்தலில் முதலிடம் பெறுவோம்.
தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்வதாக முதலில் கூறினார். பின்னர் அதற்காக போகவில்லை என பொருள்பட கூறினார். அங்கு நடந்த சூழல் அடிப்படையில் முதல்வர் ஏன் டெல்லி சென்றார் என்பதை அவரிடம் கேட்டால் தெளிவாக சொல்வார் என நினைக்கிறேன். பிரதமர் மோடியை தனியாகவும் சந்தித்து பேசியுள்ளார். அமலாக்கத் துறை சோதனைக்காக தான் பிரதமரை முதல்வர் சந்தித்தார் என்ற விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் எண்ணமும் அதுவாகத்தான் உள்ளது,” என்று அவர் கூறினார்.