சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க டிஜிட்டல் உரிமம்: மாநகராட்சி அறிமுகம்

சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க டிஜிட்டல் உரிமம்: மாநகராட்சி அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்போர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற முடியும்.

சென்னை மாநகராட்சியின் இந்த டிஜிட்டல் முறையானது, வெளிப்படைத்தன்மை, திறமையான நிர்வாகம் மற்றும் மக்களுக்காக மையப்படுத்தப்பட்ட சேவைகளின் நோக்கில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.கடந்த மே 21 முதல், அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை நேரடியாகக் கண்காணித்தல், புதிய தகவல்கள் மற்றும் அங்கீகாரங்களை ஆன்லைனில் பெறுதல் மற்றும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மண்டல குழுவால் செயலாக்கப்பட்டு, போக்குவரத்துக் காவல் அனுமதி பெற ஒப்படைக்கப்படும். பின்னர், இந்த விண்ணப்பங்கள் ஒற்றை சாளர குழுவின் முன் வைக்கப்படும்.

இந்தக் குழுவானது மாதந்தோறும் ஒரு முறை கூடி, உரிய அனுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அங்கீகாரம் பெற்ற விண்ணப்பங்கள் டிஜிட்டல் வடிவில் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும். இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு இறுதி அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் "https://chennaicorporation.gov.in" இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்போர் அனைவரும் இந்த ஆன்லைன் நடைமுறையினை முழுமையாகப் பயன்படுத்தி, நேர்மையான மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறையை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும், என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in