கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக எமஎல்ஏ அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் அசோக் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளார். தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை,” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் தரப்பில் மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று திமுக வேட்பாளர் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டிஆஷா, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை சரிபார்த்து மறு வாக்குஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மறு எண்ணிக்கை முடித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in