திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: மாநிலங்களவைத் தேர்தலில் கமலுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு!

கமல்ஹாசன், சல்மா, பி.வில்சன்
கமல்ஹாசன், சல்மா, பி.வில்சன்
Updated on
1 min read

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 19 நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும். நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களுக்கும், மற்றுமுள்ள ஒரு இடத்துக்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

திமுக வேட்பாளர்களாக 1. பி.வில்சன், 2.எஸ்.ஆர்.சிவலிங்கம், 3.ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா, ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன் - கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த கமல்ஹாசன், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார். அவர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. எனவே, ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் திமுகவில் ஒரு எம்.பி. பதவி கமலுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி ஆகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in