பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்பு: நடந்தது என்ன?

பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்பு: நடந்தது என்ன?
Updated on
1 min read

சென்னை: ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடும் வகையில் பல்வேறு விதமான ராட்டினங்கள் உள்ளன. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை

நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடி விளையாடி மகிழ்வதுண்டு. தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பொழுது போக்கு மையத்தில் இருந்த `டாப் கன்' எனும் ராட்சத ராட்டினம் ஒன்றில் சுமார் 30 பேர் 20 அடி உயரத்தில் அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர்.

ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களை மீட்க வேண்டுமென உதவி கோரினர்.

மறுபுறம் தகவலறிந்த நீலாங்கரை போலீஸார் மற்றும் திருவான்மியூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். ராட்சத கிரேன்களைக் கொண்டு ராட்டினத்தில் இருந்தவர்களை ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறக்கினர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in